Indhyan Logo
Tamil Zone Banner
பொருட்பால்
திருக்குறள்
  • அறத்துப்பால்
ஈகை
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.